மிகப் பெரிய தொழிலதிபர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரே மகன். மகனை நன்கு படிக்க வைத்திருந்தார். ஒழுக்கத்துடனும் வளர்த்திருந்தார். தனக்குப் பிறகு அவன் நிர்வாகத்தை கவனிக்க வேண்டுமென்று விரும்பினார். அவனோ விளையாட்டுத்தனமாய் நண்பர்களுடன் சுற்றுவதும், சுற்றுலா செல்வதுமாய் நாட்களைச் செலவழித்தான். நிறுவனத்திற்கு வருவதில் ஆர்வம் காட்டவில்லை. சில நாட்களில் அப்பா ஊரில் இல்லாத போது மட்டும் அவருடைய கட்டாயத்தின் பேரில் வந்து போவான் . அப்போதும் கூட அங்கே என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள விருப்பம் காட்டியதில்லை.
அப்பா ஒரு நாள் அவனிடம் சொன்னார் ,
" மகனே , இனி உன்னை நான் அலுவலகம் வரச் சொல்லித் தொந்தரவு செய்ய மாட்டேன். மிகத் திறமையான இளைஞன் ஒருவனை வேலையில் சேர்த்திருக்கிறேன். அவனது திறமையும் , அறிவும் , நானே வியந்து போகும்படி இருக்கிறது . இனி நான் இல்லாத சமயங்களில் அவன் திறமையாக நிர்வகிப்பான் " என்றார் .
இதைக் கேட்டதும் மகனுக்கு ஆத்திரம் மேலிட்டது ,
" என்னப்பா , நான் ஒருவன் இருக்கும்போது இன்னொருவனை உங்களுக்கு அடுத்த ஸ்தானத்தில் வைக்க உங்களுக்கு எப்படி மனது வந்தது ? அவனை உடனே வேலையில் இருந்து நீக்கிவிடுங்கள். நான் இனிமேல் தினமும் அலுவலகம் வருகிறேன் " என்றான்.
அப்பா சிரித்தபடி சொன்னார் ,
" நீ எடுத்திருக்கிற முடிவு எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. இருந்தாலும் அவனது திறமைக்கு முன்னால் நீ ஒன்றுமில்லை ". அப்பாவின் பதில் அவனது கோபத்தை அதிகப் படுத்தியது .
" இருக்கட்டும் , இருக்கட்டும். இன்று முதல் நான் அலுவலகம் போய்க் கூடிய "சீக்கித்தில் அவனை விரட்டுவேன் " என்று மனதுக்குள் பொருமிக் கொண்டான்.
மறுநாள் சீக்கிரமே கிளம்பி அப்பாவுக்கு முன்பாக அலுவலகம் போய்ச் சேர்ந்தான். முதலாளியின் மகன் வருவதைக் கண்ட அனைத்து ஊழியர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள், அந்த ஒருவனைத் தவிர .
" என்ன திமிர் இவனுக்கு. மரியாதை தெரியாதவன். எல்லாம் அப்பா கொடுத்திருக்கிற இடம். அப்பா வந்ததும் நடந்ததைச் சொல்லி இன்றே அவனை விரட்டியடிக்க வேண்டும் " என்று முடிவெடுத்தான்.
அப்பா வந்து சேர்ந்ததுமே நடந்ததைச் சொன்னான். அவரோ அதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
"அவன் அவசர வேலையாய் இருந்தால் நான் வருவதைக் கூட கவனிக்க மாட்டான். இன்று மதியத்திற்குள் ஒரு வாடிக்கையாளருக்கு சரக்கு அனுப்பியாக வேண்டும். அதனால் அதற்கான கோப்புகளை ஏற்பாடு செய்யும் மும்முரத்தில் கவனிக்காமல் இருந்திருப்பான் . அதோடு இப்போதைக்கு அதற்கான ஒழுங்கு முறைகள் அவனுக்குத்தான் தெரியும். அவனை எப்படி நீக்கிவிட்டால் அந்த வேலையை யார் செய்வது?" என்றார்.
அப்பாவின் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை ,
" சரி , இன்று முதல் அந்த வேலையை நானும் கற்றுக் கொள்கிறேன் " வாக்குறுதி அளித்ததுடன் செயலிலும் காட்டினான். இருப்பினும் கணினியில் பல புதிய விஷயங்களை மணிக் கணக்கில் கற்றுக் கொள்வதும் , கையிருப்பு மற்றும் தேவையை நிர்வகிப்பதும் , அவற்றைப் பதிவு செய்து கொள்வதும் ... அப்பப்பா. என்னதான் படித்தவன் என்றாலும் பழக்கப்படுத்திக் கொள்ள சிரமமாகத் தானிருந்தது. இருந்தாலும் அந்தப் புதியவனை விரட்டும் வெறியில் கற்றுக் கொண்டான்.
இடைப்பட்ட காலத்தில் அந்த இளைஞன் இவனிடம் மெலிதாய்ப் புன்னகை செய்தது மட்டும் உண்டு. மற்றபடி பெரிய மரியாதை ஏதும் காட்டவில்லை . இன்னொரு விஷயத்தையும் அவன் கவனித்தான். முதலாளிக்குக் கொடுக்கப்படும் மரியாதை அவனுக்கும் கொடுக்கப்பட்டது. விசாரிக்கும்போது சம்பளம் நிர்ணயிப்பது , பணத்தை தினசரி வங்கியில் செலுத்துவது ,விடுப்பு அளிப்பது போன்ற காரியங்களையும் அவன் கவனித்துக் கொள்வது தெரியவந்தது.
" இதுதான் உன் ஆட்டத்துக்குக் காரணமா ? அதையும் கற்றுக் கொள்வேன். உனக்கு நாள் நெருங்கி விட்டது மகனே ! " மனம் கருவியது.
மாதங்கள் ஓடி வருடம் ஆனது. இப்போது முதலாளியின் மகன் சகலத்தையும் கற்றுத் தேர்ந்திருந்தான் . இப்போது அவனால் தனியாக நிர்வகிக்க முடியும். தனது தோழர்கள் சிலர் மூலம் பல புதிய வாடிக்கையாளர்களையும் பிடித்து விட்டான். உற்பத்திப் பொருளுக்கான தேவையும் அதிகரித்தது . மேலும் புதிய பணியாட்களை சேர்த்தான் . நிறுவனம் மேலும் வளர்ந்தது .
ஒரு நாள் அப்பா மகனை அழைத்தார். " நீ இப்போது நான் எதிர்பார்த்ததை விடத் தேறிவிட்டாய் . இனி நமது நிறுவனத்தை நிர்வகிக்க நீ போதும். அந்த இளைஞனை ஒரு தொகையைக் கொடுத்து வேலையை விட்டு நீக்கிவிடுவோம் " என்றார் .
மகன் சொன்னான் ,
" அப்பா , அவனது திறமையின் மீது இருந்த பொறாமைதான் என்னை அனைத்தையும் தீவிரமாய்க் கற்றுக் கொள்ள வைத்தது. அவன் உழைப்பின் மீது இருந்த பொறாமைதான் என்னையும் கடினமாய் உழைக்க வைத்தது. அவனால்தான் எனக்குள் இருந்த ஒரு திறமையான நிர்வாகியை நான் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. நான் அனுபவமற்றவனாக இருந்த போது அவனுடைய மதிப்பு தெரியாமல் வெறுத்தேன். இப்போதோ அவனைக் கண்டு வியந்து போகிறேன்.என்னுடைய ஆசை என்னவென்றால் இப்போது நம்முடைய உற்பத்திப் பொருளுக்கு அதிகமான தேவை வந்து விட்டது. எனவே பக்கத்து ஊரில் இன்னும் ஒரு புதிய கிளையைத் திறந்து , அவனை அந்தக் கிளையை நிர்வகிக்கச் செய்வோம். நமக்கும் கூடுதல் வருமானம். அவனது திறமைக்கும் மரியாதை செலுத்தியது போலிருக்கும் " என்றான்.
தன்னுடைய திட்டம் பலித்துவிட்டதைக் கண்டு அப்பா சந்தோஷமாய் மகனைத் தட்டிக் கொடுத்தார்.
செல்லமே ! சில நேரங்களில் உன்னுடைய ஸ்தானத்தை அபகரித்துக் கொள்வது போலத் திறமையான போட்டியாளர்கள் உன்னுடைய வேலை ஸ்தலத்தில் தோன்றலாம் . நீ முன்பிருந்த மதிப்பினை இழந்து இரண்டாம் பட்சமாக நடத்தப்படலாம். மனம் நொந்து போகாதே. நீ இன்னும் அதிகமாய்க் கற்றுக் கொள்ள வேண்டுமென்று விரும்பும் தேவனின் செயலாகக் கூட அது இருக்கலாம். சோர்ந்து போய்விடாதே. உன்னைக் கூர்மையாக்கிக் கொள்.
" அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 8 :28
No comments:
Post a Comment