'நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல் எல்லாவற்றையுங்குறித்து
உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்கு தெரியப்படுத்துங்கள்' (பிலிப்பியர் 4:6)
கவலையில்லாத மனிதர் உலகில் எவருமே இல்லை. மனிதர்கள் தங்கள் பல தேவைகளைச் சந்திக்க முயற்சிசெய்து அது முடியாதபோது கவலையடைகின்றனர். சிலர் கவலையை முழுவதுமாக தங்கள் சுயபெலத்தால் மேற்கொள்ள மாம்சரீதியான முடிவுகளை எடுத்து கைகூடி வராமல் போகும்போது அவர்கள் சோர்வுக்குள்ளாகி வேதனையோடு வாழ்கின்றனர். வேறு சிலரோ கவலை மேற்கொள்ளும்போது தங்கள் சுயபெலத்தில் சாயாமல் தேவனின் பக்கமாகச் சார்ந்து தேவனுடைய பாதத்தில் கவலைகளை வைத்துவிட்டு அவர் சித்தத்திற்காக காத்திருக்கிறார்கள். இவர்கள் தான் உலகில் ஜெயம் பெற்றவர்களாக வாழ்கின்றார்கள். நீங்கள் கவலைப்படுவதினால் உங்கள் உயரத்தில் ஒரு முழத்தையாவது கூட்டமுடியாது என்பதனை அருமை இரட்சகர் இயேசு ஆணித்தரமாக எடுத்துக் கூறினாரே. கவலைப்படுவதினால் ஒரு பிரயோஜனமுமில்லை. உங்கள் கவலைகளை என்மீது வைத்துவிடுங்கள் என்ற ஆண்டவர் இயேசு நம் அருகில் இருக்கும்போது நமக்கு ஏன் கவலை?
ஆபிரகாம் வயது சென்றவனானபோது கர்த்தர் ஒரு குமாரனைப் பெறுவாய் எனக்கூறியபோது தான் வயது சென்றவனாய் இருப்பதையும் அவன் மனைவி சாராளின் கர்ப்பம் செத்துவிட்டதையும் நினையாதிருந்தான். மாறாக தேவன் அற்புதங்களை செய்கிறவர், அவர் சொல்லும் காரியம் நிறைவேறியே தீரும் என்பதனை மாத்திரமே விசுவாசித்தான்.
நம்முடைய வாழ்வில் நமது நிலைமை என்ன? கவலைகள் நம்மை வாட்டும்போது ஆபிரகாமைப்போல நினைக்ககூடாதவற்றை நினைக்காமல் நினைக்கப்படவேண்டியதை நினைத்து, நிம்மதியின் கன்மலை நிச்சயம் அற்புதம் செ;யவார் என்று விசுவாசித்து கவலைகளை மேற்கொண்டு கர்த்தர் சமூகத்தில் நித்தமும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடுவோம். டாக்டர். கே.பி. யோகன்னான் என்பவர் இப்படி எழுதுகிறார். எனக்கு ஒரு புடவை வேண்டுமென்று தேவைப்படுகின்ற மகளிடம் இல்லை என்று கூறுவதைப்பார்க்கிலும் நாம் கர்த்தரிடம் ஜெபிப்போம். அவர் தருவார் எனக்கூறி தைரியப்படுத்துவதுதான் மேலானது. ஆம் இல்லாதவர்களிடம் இல்லாதவைகளைக் கேட்காமல் ஷஇருக்கிறவராக இருக்கின்றேன்| என்றவரிடம் இருக்கின்றவைகளையே கேட்போம். கவலைகளை மறப்போம். கர்த்தர் சமூகத்தில் களிப்புடன் வாழ்வோம். கவலை என்னும் வலையில் விழாமல் தாவீது கூறியதுபோல் கர்த்தரின் கரங்களில் மாத்திரம் விழுவோம். வெற்றி நிச்சயம்.
'நேச பிதாவே பின்னடைவுக்கு ஏதுவான பிரயோஜனமற்ற கவலைகளை புறம்பே தள்ளி உம்மையே நோக்கி ஓடிவர கிருபை செய்தருளும் ஆமென்!'
No comments:
Post a Comment