'பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல் கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்' (சங்கீதம் 125:2).
இப்போது வளவைச்சுற்றி நாலாபக்கமும் கம்பிவேலி போட்டு மேலே தகரத்தினாலும் அடைத்துவிட்டேன். இனிமேல் ஆடுமாடுகளினால் என் பயிர்களுக்கு எந்தச் சேதமும் வராது. வீடும் பாதுகாப்பாக இருக்கும். இப்போது தான் மனதுக்கு ஆறுதலாக இருக்கின்றது எனக்கூறி நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ஒரு தோட்டக்காரர்.
வேதத்திலும் இப்படியாக, ஏன் இதையும் விட தனக்கு பாதுகாப்பு உண்டு என தைரியமாக மகிழ்ச்சியுடன் முழங்கினான் தாவீது. தாவீது இப்படியாக கூறுகின்றான் கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும் என் கேடகமும் என் இரட்சண்ய கொம்பும் என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார் (சங் 18:2). பிரதான திசைகள் நான்கும் உப திசைகள் நான்குமாக எட்டுத் திசைகளிலும் இனிய தேவன் எங்கும் வியாபித்தவராக எட்டுவிதமாக காத்து நிற்கின்றார் என மகிழ்ச்சியுடன் கூறுகிறான் தாவீது. தேவனுக்கு முன்பாகத் திறந்த, ஒளி மறைவில்லாத இருதயத்தை கொண்டதினாலும் மற்றவர்களை மகிழ்வுடன் மன்னித்ததுமின்றி, மன்னிப்பை ஏற்றுக்கொண்டதினாலும் தேவனுடைய மனதுக்கு உகந்தவனாகக் காணப்பட்டதினாலும் தாவீது இந்த அசைக்கப்படாத பாதுகாப்பு அரணை ஆசீர்வாதமாகப் பெற்று வாழ்ந்தான்.
நம்முடைய வாழ்விலும் நாம் இவ்விதமான பாதுகாப்பைப் பெற்று வாழ்கின்றோம் என தைரியமாகக் கூறமுடியுமா? தேவனுக்கும் பிரியமுள்ளவர்களாகக் காணப்படுவதற்கு ஏற்ற குணாதிசயங்களைத் தாவீதைப்போல் கொண்டிருக்கும்போது எட்டுத்திசையிலும் எமதினிய தேவன் அன்பின் அரசராக, இன்ப இயேசுவாக, சமாதான காரணராக, சர்வவல்லவராக, ஜெபத்தை கேட்கிறவராக, போஷிக்கும் புண்ணியராக, அனுகூல துணையாளராக, காத்து நடத்தும் காருண்ய தேவனாக நம்மை சூழ்ந்து காத்துக்கொள்வார். தாவீதைப்போல் தாகம் கொண்டு தாழ்மையின் ரூபமாக வந்தவரை வாஞ்சித்து அவர் வழி நடந்து வாழும்போது வெற்றியும், நல்வாழ்வும் நமக்கே சொந்தமாகிவிடும். யோபுவை வேலியடைத்துக் காத்த தேவன் தாவீதை சூழ நின்று அட்டதிற்கு வியாபியாகக் காத்த கர்த்தர் எம்மையும் என்றென்றும் சூழ நின்று இன்பாய் வழிநடத்துவார்.
'இரக்கம் நிறைந்தவரே தாவீதைப்போல மறைபாவங்களை அறிக்கையிட்டு உம் கரங்களில் என்னை ஒப்புவிக்கிறேன். மன்னித்து வழிநடத்தும் ஆமென்!'
No comments:
Post a Comment