“அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள்;
ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்;
ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்” (ரூத் 1:14).
நகோமி, அவளுடைய வாழ்க்கையில் மிகவும் நொந்துபோன நிலையில், தம்முடைய சொந்த
இடத்திற்கு திரும்பும் பொழுது, தன்னுடைய இரண்டு மருமகள்களையும் பார்த்து,
நீங்கள் உங்கள் தேசத்திற்கு திரும்பிச் சென்று, திருமணம் செய்துகொண்டு
வாழுங்கள் என்று சொல்லுகிறாள். அப்பொழுது ஓர்பாள் அதற்கு செவி சாய்த்து
சென்றுவிடுகிறாள். அவள் அழுதாள் ஆனால் அவளுடைய உள்ளம் மோவாபை நோக்கி
இருந்தது. ஆதலால் அவள் திரும்பிச் சென்றுவிட்டாள்.
ரூத்தின் இருதயமோ தேவனையே நோக்கி இருந்தது. ஆகவேதான் அவள் தேவனுடைய
வழியில் உறுதியாய் தரித்திருந்தாள். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள்
ஆவிக்குரிய வாழ்க்கை வாழுவதைப் போலக் காணப்பட்டாலும், அவர்களுடைய
உள்ளத்தில், ஒர்பாளைப் போல மோவாபையே நோக்குகிறார்கள். ஒருவேளை நீயும்
அவ்விதமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அப்படியானால் சகோதரனே!
சகோதரியே! நீ மிகவும் பரிதாபத்திற்குரிய நபர். ஒர்பாள் இன்றைக்கும், ‘நல்ல
தருணத்தை இழந்துவிட்டேனே…’ என்று பாதாளத்தில் கதறுகிறாள்.
நீயோ அப்படியிராமல், ரூத்தைப் போல தேவனுடைய வழியைத் தெரிந்துகொண்டு,
அவருக்காக உன்னை ஒப்புக்கொடு. அப்பொழுது நீ ஆவிக்குரிய சிலாக்கியங்களுக்கு,
ரூத்தைப் போல பங்காளியாக காணப்படுவாய். இன்றைக்கும் ரூத் நித்திய ஜீவனில்
கர்த்தருக்கு நன்றிகளை ஏறெடுக்கிறாள். அன்பானவர்களே! உங்கள் வாழ்க்கையை
சிந்தித்துப்பாருங்கள். எதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள்? நித்திய
ஜீவனா? நித்திய மரணமா? தேவன் பக்கமாக மனந்திரும்புங்கள்.
No comments:
Post a Comment