Google Ads

Thursday, 16 November 2017

நம்மை நாமே மன்னித்துவிடுதல்

"நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன்" எபிரேயர் 8.12.

தேவனுடைய பிள்ளைகள் பலரும் தங்களைத் தாங்களே குற்றப்படுத்திக்கொண்டவர்களாய், குற்ற மனப்பான்மையுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் மெய்யான மனஸ்தாபத்துடன் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டபோதுதானே தேவன் அவர்களை மன்னித்திருந்தாலும், அவர்கள் தங்களைத் தாங்களே மன்னித்துக்கொள்ளக் கூடாதவர்களாயிருக்கின்றனர். சிலருடைய விஷயத்தில் சாத்தான், "நீ இவ்வளவு பெரிய பாவம் செய்திருக்க, மகா பரிசுத்தரான தேவன் உன்னை மன்னித்து விட்டார் என்று நினைப்பதற்கு உனக்கு எவ்வளவு தைரியம்!" என்று அவர்களிடத்தில் இரகசியமாகப் பேசி, அவர்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க முற்படுகிறான். அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய் இருக்கிறான். "கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை." ரோமர் 8.1 என்றே வேதவசனம் கூறுகிறது.

*ஒருமுறை ஒரு கிறிஸ்தவ வாலிபன் ஒரு பாவம் செய்தான். அவன் தன் உள்ளத்தில் அதைக் குறித்து உணர்த்தப்பட்டு, மனஸ்தாபத்துடன் அப்பாவத்தை அறிக்கை செய்ததுமல்லாமல், அப்போதே தன் வாழ்க்கையையும் அந்த விஷயத்தில் சரிப்படுத்திக் கொண்டான். ஆனால் பிசாசானவனோ அவனைக் குற்றப்படுத்திக் கொண்டேயிருந்தான். இவ்வாறு பல ஆண்டுகள் குற்ற உணர்வோடு (guilty feeling) போராடிய பின்னர், அவன் ஒரு நாள் தன் சபையில் கிறிஸ்துவை அடிக்கடி தரிசனத்தில் காணும் ஒரு மூத்த சகோதரியை அணுகினான். அவர்களிடம் அவன், 'சகோதரி! அடுத்த முறை நீங்கள் தரிசனத்தில் கர்த்தராகிய இயேசுவைக் காணும்போது, நான் வாலிபனாக இருந்தபோது என்ன பாவம் செய்தேனென்று தயவுசெய்து அவரிடம் கேளுங்கள்' என்று கூறினான். அவர்களும் அப்படிச் செய்ய இசைந்தார்கள். அடுத்தமுறை கிறிஸ்து அவர்களுக்குத் தரிசனமானபோது அவர்கள், 'கர்த்தாவே, அந்த நபர் வாலிபனாக இருந்தபோது செய்த பாவம் என்ன?' என்று கேட்டார்கள். அதற்கு, 'அது எனக்கு ஞாபகமில்லை!' என்று அவரிடத்திலிருந்து சட்டென பதில் வந்தது.

'எல்லாவற்றையும் அறிந்திருக்கிற தேவன் - நம் தலையிலுள்ள ஒவ்வொரு முடியையும் எண்ணிவைத்திருக்கிறவர் - நம் பாவங்களை எப்படி மறந்துவிட முடியும்?' என்று நாம் நினைக்கலாம். ஆனால் வேதவசனம் அப்படித்தான் கூறுகிறது: "நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன்" எபிரேயர் 8.12. நாம் நம்முடைய பாவங்களுக்காக மெய்யாகவே மனஸ்தாபப்பட்டால், தேவன் நம் பாவங்களை மன்னித்துவிடுவது மாத்திரமல்ல, அவற்றை அறவே மறந்து விடுகிறார்! இது வியக்கதக்க ஒரு உண்மையாகும்! நாம் பரலோகத்தின் வாசலைச் சென்றடையும் போது கர்த்தர் அங்கே நின்றுகொண்டு, 'நீ செய்தவை யாவும் என் நினைவில் உள்ளன; என்றாலும், நீ மன்னிப்பு கேட்டுவிட்டபடியால் உள்ளே வர உன்னை அனுமதிக்கிறேன்' என்று கூறுவார் என எண்ணுகிறோம். அது ஒருக்காலும் இல்லை! இப்போது மாத்திரமல்ல, நித்தியம் முழுவதிலும் - ஒருபோதும் பாவமே செய்யாதவர்கள் போலதான் நாம் அவர் முன் இருப்போம்! கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் நம்மை மன்னிப்பது மாத்திரமல்ல, நம்மை நீதிமான்களுமாக்குகிறது. ஆகவே நம் தேவன் நம் பாவங்களை மன்னித்து, அவை எல்லாவற்றையும் மறந்துவிட்டபடியினால், நாமும் நம்மை நாமே மன்னித்துக் கொள்வோமாக!!

"ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்" பிலிப்பியர் 3:13,14.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. 

No comments:

Post a Comment