இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. – (ஏசாயா 29:13).
.பழங்காலத்தில் ஸ்பெயின் நாட்டு மன்னர் தன்னுடைய அரசாட்சியின் கீழ் இருந்த ஒரு ஏழை கிராமத்தை காண விரும்பினார். அந்த கிராமத்தின் தலைவரிடம் இராஜா வருகிறார் என்று சொல்லப்பட்டது. உடனே அவர் அந்த கிராமத்தின் மக்களை கூட்டி இராஜா இந்த நாளில் வரப்போகிறார் என்று அறிவித்தார்.
உடனே மக்கள் சந்தோஷமாக அவரை வரவேற்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். தங்களால் இயன்றதை அவருக்கு கொடுத்து, சிறப்பாக அவருடைய வருகையை கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ஆனால் அவர்களிடம் இராஜாவிற்கு கொடுப்பதற்கு ஏழைகளாக இருந்தபடியால் ஒன்றுமில்லாதிருந்தது.
அவர்கள் திராட்ச இரசத்தை செய்வதில் வல்லவர்களாக இருந்தபடியால், அவர்கள் கூடி திட்டமிட்டு, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற சிறந்த இரசத்தை கொண்டு வந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பீப்பாயில் ஊற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டது.
அதன்படி ஒவ்வொருவரும் கொண்டு வந்து ஊற்றினார்கள். கடைசியில் அரசரும் வந்தார். அவரிடம் விலையுயர்ந்த வெள்ளி கிண்ணம் கொடுக்கப்பட்டது. அவரும் அதை வாங்கி மொண்டு, வாயில் ஊற்றியபோது அது வெறும் தண்ணீராக இருந்தது.
ஊற்றின ஒவ்வொருவரும், மற்றவர்கள் தங்களை காட்டிலும் நல்ல இரசத்தை ஊற்றியிருப்பார்கள் என்று வெறும் தண்ணீரை தான் ஊற்றி இருந்தார்கள். அதனால் மன்னர் வந்து குடித்தபோது அதன் வெறும் தண்ணீராகத்தான் இருந்தது. எத்தனை பரிதாபம்!
இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்கிற வசனம் எத்தனை பொறுத்தமாக அவர்களுக்கு இருக்கிறது.
நம்மில் அநேகரும் கர்த்தரை துதிக்க கூடியிருக்கும்போது, உள்ளத்திலிருந்து கர்த்தரை துதிப்பதில்லை. அவர்கள் உதடுகள் ஏதோ பாடி கொண்டிருக்கும், ஏதோ சொல்லி கொண்டு இருக்கும், ஆனால் உள்ளமோ எங்கோ இருக்கும்.
கர்த்தருடைய சமுகத்தில் வரும்போது நம்மால் இயன்றதைஇ நமது சிறப்பானதை கர்த்தருக்கு கொடுக்க வேண்டும். உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் துதியை அவருக்கு கொடுக்க வேண்டும். வெறும் உதடுகளிலிருந்து மாத்திரமல்ல, உள்ளத்திலிருந்து அவர் செய்த நன்மைகளை நினைத்து அவரை துதிக்க வேண்டும். உயர்த்தவேண்டும். நம்மிடத்தில் தேவன் விரும்பும் காரியம் அவரை துதிக்க வேண்டும் என்பதே. இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன். இவர்கள் என் துதியை சொல்லி வருவார்கள் என்று துதிப்பதற்காகவே நம்மை உருவாக்கி இருக்கிறார்.
ஆனாலும் அதிலும் அவரை வஞ்சித்து, இருதயம் ஓரிடத்திலும், உதடுகள் ஓரிடத்திலும் இருந்து துதிப்பது, மற்றவர்கள் தான் அவரை துதிக்கிறார்களே நான் துதித்தால் என்ன, துதிக்காமல் இருந்தால் என்ன என்று நினைப்பதை போன்றது. கடைசியில் மன்னர் வந்தபோது வெறும் தண்ணீரை சுவைத்ததுப் போலத்தான் இருக்கும், நம்முடைய துதிகள்.
போதகர் அல்லேலூயா சொல்லுங்கள் என்று சொன்னால்தான் சிலப்பேரின் வாயிலிருந்து அல்லேலூயா வரும். அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது என்றபடி யாராவது நம்மை சொல்ல சொல்லி அந்த துதிகள் வராதபடி, நம் உள்ளத்திலிருந்து கர்த்தரை துதிக்கும் துதிகள் வரட்டும். கர்த்தர் அதில் மகிழ்வார். “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன். அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” என்று சங்கீதக்காரன் சொல்வதுப் போல நம் வாயிலும், இருதயத்திலும் எப்போதும் அவர் துதி இருக்கட்டும். துதிகளில் பிரியப்படுகிற ஆண்டவர் அதில் பிரியப்பட்டு நம்மை ஆசீர்வதிப்பார். நமக்கிருக்கிற சிறப்பானதை கர்த்தருக்கு கொடுப்போம். அவர் தம்முடைய ஒரே பேறான சிறந்த குமாரனை நமக்காக தந்தாரல்லவா? அவரை துதிக்கிற துதி எப்போதும் நம் வாயில் உள்ளத்தில் இருக்கட்டும். ஆமென் அல்லேலூயா!
No comments:
Post a Comment