Google Ads

Friday, 27 October 2017

பினெகாஸ் யார்? அவரை பற்றி உங்களுக்கு தெரியுமா?

_*பினெகாஸ்-அவரச தேவை:*_

இன்றைய சபைகளில் தாவீதுகளுக்கு பஞ்சங்களே இல்லை.

யாரைக்கேட்டாலும் நான் *ஆராதனை வீரன்* என அடையாளப்படுத்தி கொள்கின்றனர்.

இதில் விந்தை என்ன தெரியுமோ??? ஆராதனை என்பது ஒரு ஊழியம் அல்ல அது வாழ்க்கை முறை.

அது அனுதின வாழ்வே தவிர தனியான ஊழியம் அல்ல. 

ஆனால் தாவீதை பின்பற்றுகிறேன் என்று கூறி விட்டு அவனின் தடத்தை உண்மையில் தொலைத்தவர்களே இன்றைய ஆராதனை heroக்கள்.

ஆனால் இன்றைய சபையில் எழுப்புதலுக்கான அவசர தேவை பினெகாஸ்கள் தான்.

இன்று அநேகருக்கு பினெகாஸ் யார் என்றே தெரியாது, பலருக்கு எந்த பினெகாஸ் என்று தெரியாது.

வேதம் நமக்கு இரண்டு பினெகாஸ்களை அடையாளம் காட்டுகிறது. இரண்டு பேருமே ஆசாரிய வகுப்பை சார்ந்தவர்கள்.

ஒருவன் மோசே காலத்தில் வாழ்ந்த வாலிபன். ஆரோனின் பேரன்.

இன்னொருவன் சாமுவேல் காலத்தில் வாழ்ந்த ஏலீயின் மகன் பினெகாஸ்.

முதலில் ஆரோனின் பேரன் பினெகாஸை பற்றி படிப்போம்.
அவன் தான் இன்றைய *வாலிபருக்குள்ளே* அவசர தேவை.

அப்படி அவன் என்ன தான் செய்தான்???
வேதத்தை காண்போம்

எண்ணாகமம்  25:11

நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, *ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால்,* இஸ்ரவேல் புத்திரர்மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்.

தேவனுக்காக பக்தி வைராக்கியம் காட்டுகிற அதற்காக தன்னுடைய சொந்த ஜனத்தில் ஒருவனையே கொன்று தேவ கோபத்தை திருப்ப தைரியம் பெற்ற வாலிபன்.

இங்கே இஸ்ரவேல் மக்கள் மீதியானிய ,மோவாபிய ஸ்திரீகளோடே விபச்சாரம் செய்து, அவர்கள் தேவனாகிய பாகாலை பணிந்து கொண்டனர்.

ஆண்டவரின் கோபமும் வாதையும் பற்றி எறிகிறது. மோசேயும் ஜனத்தின் மூப்பரும் என்ன செய்வது என்றே தெரியமல் அழுது கொண்டிருந்தனர்.

மோசேயும் கூட அழுது கொண்டிருக்கிறான்.
யோசுவா எங்கே என்றே சொல்லப்படவில்லை.

இப்படி தேவ சபையில் பாவம் பற்றி எரிகிறது. இதற்கான பரிகாரம் செய்ய மோசேக்கு தெரியவில்லை.

அந்த சமயத்தில் *பாவத்திற்கு விரோதமாய் பக்தி வைராக்கியம்* காட்டுகிறான் இந்த இளம் வாலிபன்.

தானே போய்
பாவம் செய்தவனையும் அந்த மீதியானிய ஸ்திரியையும் குத்தி போடுகிறான். *வாதையும் தேவ கோபமும் நின்றுவிட்டது.*

ஆண்டவர் உடனே அவனோடு *உடன்படிக்கை* செய்துவிட்டார். தலைமுறை தலைமுறையும் பினெகாஸ்க்கும் அவன் சந்ததிக்கும் தான் பிரதான ஆசாரியத்துவம் என்று.

ஆ! வாலிபனே இந்த ஆவிதானே உனக்கும் தேவை.

ஆடுவதும் பாடுவது எளிது

ஆனால்
*1.பக்தி வைராக்கியம் காட்டுவதும், 2.பாவத்திற்கு எதிர்த்து நிற்பதும்,*
*3.தேவ கோபத்தை நிறுத்துவம்*
அத்துனை எளிது அல்ல.

ஆனால் அதற்கே ஆட்கள் தேவையாக இருக்கிறது.

பாவத்திற்கு விரோதமாக நீ போராட ஆரம்பிப்பாயானால் தேவனுடைய செயல் உன்னில் நிறைவேறுவதை தடுக்க யாராலும் எதனாலும் இயலாது.

இதனாலே பின் அதிகாரத்தில் படிக்கும் போது அதே மீதியானியர்களை அழிக்க தேவனே கூறுகிறார்.

அதில் முதலாவது நின்றவன் பினெகாஸ். தேவ யுத்தத்தை இந்த சரியான காரியத்தில் பாவத்தின் அஸ்திபாரமாகிய அந்த மீதியானியரை கொல்ல சரியான ஆள் இந்த பினெகாஸ்தான்.

மோசேயால் செய்ய முடியாத போதும் தேவ காரியத்தை தைரியமாக யாரை எதிர்த்தாலும் செய்கிற பினெகாஸை போல மாறிடுவோமாகில் *எழுப்புதல்* தடையின்றி பரவிடும்.

வாலிபனே இதோ உனக்கு ஒரு அழைப்பு.

ஆடினதும், ஆனந்தமாய் இருந்ததும் போதும் *உன் வாழ்வை பாவத்திற்கு விரோதமாய் போராடி இரத்தம் சிந்தவும் ஆயத்தமாகிற பினெகாஸாய் மாறப்போகிறாயா?*

இல்லை, *பாவத்தை சபைகளில் கொண்டு வந்து தேவ நாமத்தை வெட்கப்படுத்தும் ஏலீயின் மகனாகிய பினெகாஸாக மாறப்போகிறாயா??*

நிச்சயமாக உங்கள் ஜெபத்திற்கு பதில் உண்டு

*தியானம் பகுதி* 👏🏻

ரேடியோவை கண்டுபிடித்த *மார்கோனி* சிறுவயதாய் இருந்தபோது ஒறுநாள் தன்னுடைய தகப்பனார் ஜெபித்து கொண்டிருப்பதை பார்த்து  சிரித்துகொண்டுஇருந்தார்.

தகப்பனார் மகனை பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு மார்கோனி, அப்பா... நீங்கள் *பரமண்டலங்களில் இருக்கும் எங்கள்பிதாவே* என்று ஜெபித்தீர்கள்

அந்த பரமண்டலம் எங்கேஇருக்கிறது? என்று கேட்டார். அதற்கு தந்தை மேலே கை காண்பித்தார்.

மேலே பரமண்டலத்தில் இருக்கிற பிதாவுக்குஇங்கு இருந்து நீங்க செய்கிற ஜெபம் எப்படிகேட்கும்? பக்கத்திலிருக்கிற எனக்கே கேட்கமாட்டேங்கிறது என்று  பரியாசமாய் கேட்டார்.

அதற்கு தந்தை என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மறுபடியும் முழங்கால் போட்டு ஆண்டவரே நீரே என் மகனுக்கு புரியவையும் என்று ஜெபித்துவிட்டு போய்விட்டார்.

மார்க்கோனி ரேடியோ கண்டுபிடித்தபின் தன்னுடைய சொந்த ஊரிலே நடந்த பாராட்டு
விழாவில்...

என்னுடைய சிறுவயதிலே என் தந்தையிடம் நான் கேட்ட ஒரு கேள்விக்கு ஆண்டவர் என் வழியாகவே எனக்கு பதில் சொல்லிவிட்டார்.

எப்படியெனில் நான் கண்டுபிடித்த இந்த ரேடியோவை ஒரு குறிப்பிட்ட  இடத்தில் வைத்து வைத்து கேட்கும்போது  முன்னூற்றுஇருபது கி.மீ தொலைவில் இருக்கும் மற்றொரு இடத்தில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எந்த நேரத்தில் ஒளிபரப்பபடுகிறதோ அதே நேரத்தில் இங்கேயும் கேட்கமுடியும்.

சாதாரன ஆறறிவுள்ள மனிதனாகிய நான் கண்டுபிடித்த இந்த ரேடியோவே இப்படிகேட்கும்போது என்னை படைத்த ஆண்டவர் நிச்சயமாக என் தகப்பன் செய்த *ஜெபத்தை  கேட்பார்* என்று சொன்னார்.

நிச்சயமாக உங்கள் ஜெபத்திற்கு பதில் உண்டு 

என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

சங்கீதம் 66:20

____________________________

Wednesday, 25 October 2017

பாளையங்கோட்டைக்குப் போனீர்கள் என்றால்


அங்கு சாரா டக்கர் கல்லூரி,  சாரா டக்கர் ஹையர்
,
செக்கண்டரி ஸ்கூல்,சாரா டக்கர் டிரெய்னிங்

ஸ்கூல்,...என்ற பலகைகளைப் பார்க்கலாம்..

உங்களுக்கு தெரியாமலும் இருக்கலாம்..

இங்கிலாந்து தேசத்தில் இரண்டு கால்களும்

முடமான, தன் வீட்டை விட்டு வெளியே செல்ல

முடியாதபடி,அடைக்கப் பட்டிருந்த,ஒரு பெண்

இருந்தாள்..அவளால் ஒன்று தான் செய்ய முடியும்

ஒரு சாதாரண வீல் சேர்ல ..ஆலயத்துக்கு செல்வாள்

அப்போல்லாம் இப்போ உள்ள மாடர்ன் வீல் சேர்

கிடையாது..ஒரு நாள் தென்னிந்திய மிஷனரி

அந்த ஆலயத்தில் பேசினார்..தென் இந்தியாவில்

பெண் பிள்ளைகள் படிக்க முடியாத

சூழ்நிலைகளையும், சமுதாயக்

கட்டுப்பாடுகளையும், பெண்களை சிறு வயதிலே


கோயிலுக்கு

பொட்டுக் கட்டி, விட்டு வாழ்நாளெல்லாம் விபச்சாரி

ஆக்கப் படுகிறார்கள் என்று அழுகையோடு

சொன்னார்..பெண்கள் படிப்பது கேவலம் என்று

கருதுகிறார்கள் என்றார்..நொறுங்கிய மனதுடன்

வீட்டுக்கு வந்தாள் சாரா.. அவளுக்கு 20 வயது

இருக்கலாம்..அவளின் அப்பாவின் பெயர் ..டக்கர்..

            அவள் ஆண்டவரிடம் சொன்னாள்..

ஆண்டவரே எனக்கு இந்தியாவுக்கு போக ஆசையாய்

இருக்கிறது..ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டி

உங்கள் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள் என

அந்தப் பெற்றோரின் காலில் விழுந்து கெஞ்ச

வேண்டும் போல் இருக்குது ..

அறிவுக் கண்ணைத் திறந்தால் தானே ஒளி வரும்

அவளுக்கு ஒன்று தோன்றியது..

அவள் இந்தியாவைப் பார்த்ததில்லை..

திருநெல்வேலி மக்களைப் பார்த்ததில்லை..

திருநெல்வேலி மக்களுக்காக ஏங்கினாள்.

அவள் உறவினரிடம்  இது பற்றி சொன்னாள்..

அவள் தன் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை..

அதற்கு பதிலாக பணமாகத் தாருங்கள் என்று

பணத்தை சேர்த்தாள்..இரு ஆடைகளுக்கு மேல்

அவள்  வாங்கவில்லை..

ஒரு நாள் அந்த மிஷனரிக்குப் பணத்தை அனுப்பி

வைத்தாள்..சாரா....அதில்  உருவாகியது தான்

சாரா டக்கர் ..ஸ்தாபனங்கள்..

இன்று 4000 பிள்ளைகள் படிக்கும் பெரிய ஸ்கூலாக

கல்லூரியாக கம்பீரமாக நிற்கிறது..

அவள் இந்தியாவுக்கு வரவில்லை.

திருநெல்வேலிக்கும் வரவில்லை

அதில் படிக்கும் ஒவ்வொருவரும், சொல்வது

"நான் சாரா டக்கர்  மாணவி " என்று பெருமையாகச்

சொல்லுகிறார்கள்..

அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்..

------------------------------------

Friday, 20 October 2017

பிளவுண்ட மலை

என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன். – (யாத்திராகமம் 33:22).
.அகஸ்டஸ் டாப்லாடி என்னும் தேவ மனிதன், தனது 16ஆவது வயதில் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். அவரது 16ஆவது வயதில், மாம்ஸ் மோரிஸ் என்னும் ஆத்ம பாரம் கொண்ட தெருவில் பிரசங்கம் செய்யும் ஊழியர் நடத்திய சிறுக் கூட்டத்தில் அவர் கலந்துக் கொண்டார். அந்த ஊழியர் எபேசியர் 2:13-ம் வசனத்திலிருந்து சத்தியத்தை பகிர்ந்துக் கொண்டார்.  ‘முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்’  என்னும் இந்த வார்த்தைகள் அவருக்குள் கிரியை செய்ய ஆரம்பித்தது. அவர் அப்போதே தம்மை கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்து,  கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்.

சிலவருடங்கள் கழித்து, அவர் ஒரு சூறாவளிப் புயலில் சிக்கிக் கொண்டார். எங்கு பத்திரமாக இருப்பது என்று தெரியாத நிலையில்,  அங்கு ஒரு பாறையையும் அதில், ஒரு பிளவு இருப்பதையும் கண்டார். அந்தப் பிளவில் புயல் ஓயுமட்டும் தங்கி இருந்து, தப்பித்தார். தனக்கு அந்த புகலிடத்தைக் கொடுத்த தேவனை துதிக்கையில், கன்மலையான கிறிஸ்துவும, தமக்காக பிளக்கப்பட்ட அவரது சரீரமும் அவருடைய கண்முன் தோன்றியது.  அங்கேதானே இந்தப் பாடலை எழுத ஆரம்பித்தார்.

‘பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே’.  இந்த நாளிலும் நாம் இந்தப் பாடலை பாடி நம் கன்மலையாகிய கிறிஸ்துவை நினைவு கூர்ந்து துதிக்கிறோம். நமக்கு ஒரு புகலிடம் உண்டு. நம் வேதனையில், நம் துன்பங்களில் நம்மை மறைத்து புயல் நீங்கும் வரை தம்முடைய கரத்தின் மறைவில் மறைத்து பாதுகாக்கும் தேவன் நமக்கு உண்டு.

கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத்  தப்பும் அடைக்கலமும்,  வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். – (ஏசாயா 25:4).

ஆம் நம் தேவனே நமக்கு பெலனும்,  திடனும்,  அடைக்கலமும் கோட்டையுமானவர். அவரின் செட்டைகளின் நிழலிலே களிகூறுகிறோம். இந்தச் சீரைப் பெற்ற ஜனமாகிய நாம்  எவ்வளவு பாக்கியம் பெற்றுள்ளோம்! ஆமென்.

நம் அர்ப்பணிப்பு எது?

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். – (யோவான் 12:25).
.’இப்பொழுது நாம் என்ன செய்வது? கீழே ஒரு நகரம் இருக்கிறது. பள்ளிக்கூடம் ஒன்றும் காணப்படுகிறது. இங்கே இந்த ஹெலிகாப்டர் வெடித்து கீழே விழுந்தால் இந்நகரிலுள்ள அநேகர் இறந்து விடுவார்கள். ஆனால் நாம் தப்பித்து கொள்ள பாராசூட் இருக்கிறது’ என்று கூறி கொண்டிருந்தவரிடம் மற்றொருவர், ‘நாம் முடிந்த அளவு வேகமாக ஹெலிகாப்படரை ஓட்டி சென்று விடுவோம். ஒருவேளை ஹெலிகாப்டர் வெடித்தால் நாம் இருவர் மாத்திரமே இறப்போம். ஆனால் கீழேயுள்ள அநேகரை காப்பாற்றி விடலாம்’ என்று கூறி கொணடிருக்கும்போதே அந்த ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. பழுதடைந்த அந்த ஹெலிகாப்டர் ஊருக்கு வெளியில் சென்று வெடித்ததால் நகர மக்களுக்கு எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. ஆனால் அதை ஓட்டி சென்ற இரண்டு இளம் இராணுவ அதிகாரிகளும் உடல் கருகி இறந்து விட்டனர். இந்த இருவரும் பேசிய இறுதி பேச்சுக்களே மேலே படித்த சம்பவம்.

அதில் ஒருவர் ஆந்திர மாநிலம் விஜய நகரத்தை சேர்ந்த 28 வயதான இராணுவ அதிகாரி பானுசந்தர். கணிணி துறையில் இஞ்சினியரான இவர் பல்கலை கழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றிருந்த போதிலும், தனக்கு வந்த வேலை வாய்ப்புக்களை தள்ளிவிட்டு நாட்டு மக்களுக்கு சேவை செய்யும்படி இராணுவத்தில் சேர்ந்து கடின உழைப்பு மற்றும திறமையினால் சிறுவயதிலேயே அதிகாரியாக உயர்ந்தவர். மற்றவர் சண்டிகரை சேர்ந்த ராதோர். பெற்றோருக்கு ஒரே மகனான இவர் தன்னை தேசத்தை காக்கும் பணியில் ஈடுபடுத்தி கொண்டார். இந்த இருவரும் தப்பித்து கொள்ள வாய்ப்பிருந்தும் தப்பித்து கொள்ளாமல் இறந்ததற்கு காரணமென்ன? நான் மரணமடைவதாயிருந்தாலும் என் தேசத்சை காக்கும்படி கடைசி மூச்சு வரை போராடுவேன் என்ற அவர்களின் உறுதி மொழியே! அர்ப்பணிப்பே அப்படி செய்ய தூண்டியது.
நாம் ஆராதிக்கும் ஆலயங்கள் ஏற்பட காரணமாயிருந்த மிஷனெரிகள் அநேகருடைய வாழ்க்கை சரிதைகளை வாசித்து பார்ப்போமானால் நாற்பது, நாற்பத்தைந்து வயதிற்குள்ளாகவே அநேகர் மரணமடைந்திருக்கிறார்கள். ஒரு நண்பர் எழுதின கடிதத்தை படித்த கிரஹாம் ஸ்டெயின்ஸ் இந்தியாவின் மீது பாரம் கொண்டு அந்த கடிதத்தையே அழைப்பாக ஏற்று குஷ்டரோகிகளின் மத்தியில் ஊழியம் செய்து, அவரும், அவருடைய இரண்டு மகன்களும் இரத்த சாட்சியாக மரித்தது நாம் அனைவரும் அறிந்ததே! ஒரு மிஷனெரியின் பிரசங்கத்தின் மூலம் இந்தியாவின் நிலைமையை அறிந்த வில்லியம் கேரி அறியாமையிலுள்ள மக்களை விடுவிக்கும்படி ஜெபித்தார். குறைந்த கலிவியறிவு உடையவராக இருந்தாலும் மிஷனெரியாக இந்தியா வந்து 40க்கும் மேற்ப்பட்ட இந்திய மொழிகளில் பைபிள் அச்சிடப்பட காரணமாயிருந்தார். இப்படி அநேகர் பணி செய்யும்படி அவர்களை உந்தி தள்ளியது என்ன? சிலுவை அன்பே! அதே அன்பை நமக்குள்ளும் வாசம் செய்கிறது. ஆனால் அந்த அன்பை வெளிப்படுத்த நாம் என்ன செய்கிறோம்?
நம்மை சுற்றியுள்ள மக்களை பார்க்கும்போது மேய்ப்பனற்ற ஆடுகளை போல இருக்கிறார்களே என்று கண்ணீர் விடுகின்ற இயேசுவுக்கு உங்கள் அன்பை எப்படி வெளிப்படுத்த போகிறீர்கள்? அறுவடையோ மிகுதி ஆட்களோ கொஞ்சம் என்ற ஏக்கமுள்ள இருதய பாரமுள்ள வார்த்தைகளுக்கு நமது பதில் என்ன? நம்முடைய கிறிஸ்துவுக்கு அவருக்காக நிற்க, உழைக்க ஆட்கள் தேவை! நமது வாழ்க்கை, தாலந்துகள், நேரங்கள், விடுமுறைகள் எல்லாவற்றையும் அவருக்காக அர்ப்பணிப்போமா? அவர் நமக்கு செய்த, நமக்கு கொடுத்த எல்லா காரியங்களுக்கு ஈடாக நாம் என்னத்தை செலுத்த முடியும்? எது ஈடாகும்? ஓன்றுமே இல்லை! ஆனாலும் நம்மால் இயன்றதை அவருக்காக செய்வோமா? குடும்பத்திலுள்ளவர்கள் அதிலிருந்து பிரிந்து, தியாகமாக செய்தால்தான் ஊழியம் என்று நினைக்காதீர்கள். கர்த்தர் உங்களை குடும்பமாக இணைத்திருந்தால், குடும்பமாக அவருக்கென்று ஊழியம் செய்யுங்கள். குடும்பத்தை விட்டு விட்டு, ஊழியத்திற்கு போகிறேன் என்று சொல்லாதிருங்கள். கர்த்தர் இணைத்து வைக்கிற தேவன், பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறவர் அல்ல! மனைவி ஊழியத்திற்கு வர மாட்டேன் என்று சொல்வார்களானால், அவர்களுக்காக தேவனிடத்தில் உங்கள் ஜெபத்தில் மன்றாடுங்கள். கர்த்தர் அவர்களையும் உங்களோடு இணைந்து ஊழியம் செய்ய வைப்பார்.

அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும்

அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும். –   (பிரசங்கி 10:8-ம் வசனத்தின் பின்பகுதி).
.சீன பெரிய மதில் சுவர் (Great wall of China) உலக அதிசயங்களில் ஒன்றாகும். அது 4000 மைல்கள் நீளமுள்ளதாகவும், வட புறத்திலிருந்து வரும் தாக்குதலுக்கு சீனாவை தப்புவிப்பதற்காக கட்டப்பட்ட ஒரு பாதுகாப்பின் சுவராகும். அதைக் கட்டியவர்கள், அந்தச் சுவரை மிகவும் உயரமாக கட்டியதால், அதன் மேல் யாரும் ஏறிவிட முடியாது. மிகவும் தடிப்பமாக இருப்பதால் அதை ஊடுருவ முடியாதபடியும், மிகவும் நீளமாக கட்டியதால், அதை சுற்றி வர முடியாதவாறும் மிகவும் பாதுகாப்பாக அதை மிகுந்த ஞானத்தோடு கட்டி முடித்தார்கள்.
அப்படி பாதுகாப்பாய் கட்டியிருந்தபோதிலும், அது கட்டி முடித்த 100 வருடங்களில் சீனாவை மூன்று முறை எதிரிகள் படைஎடுத்துவந்து தாக்குதல் நடத்தி உள்ளே நுழைந்தார்கள். ஆனால் யாரும் அந்தச் சுவரை தாண்டவோ, உடைக்கவோ இலலை. பின் எப்படி சாத்தியமாயிற்று? அந்தச் சுவரில் பிரச்சனை இல்லை. ஆனால் அதைக் காவல் காத்த வீரர்களுக்கு படை எடுத்து வந்தவர்கள் லஞ்சம் கொடுத்து, அந்த காவலர்கள் கதவுகளை திறந்து விட்டபடியால் அவர்கள் மிகவும் எளிதாக உள்ளே நுழைந்து ஆக்கிரமித்தார்கள்.
அந்தச் சுவர் எத்தனை வலிமையாக கட்டப்பட்டிருந்த போதிலும், அதன் பெலன், அதன் கதவை காப்பவர்களின் கைகளிலேயே இருந்தது. நமக்குக்கூட ஆண்டவர் கண்கள், காதுகள், நாவு என்னும் கதவுகளைக கொடுத்துள்ளார். நாம் என்னதான் ஆவிக்குரியவர்களாய் இருந்தாலும், மிகவும் பலமுள்ளவன் என்று நினைத்திருந்தாலும், காணக்கூடாதக் காரியங்களையும், கேட்கக்கூடாத காரியங்களையும், பேசக் கூடாத காரியங்களையும் பார்த்தால், கேட்டால், பேசினால் சத்துரு எப்படியும் உள்ளே நுழைந்து விடுவான். அவனது தந்திரங்களுக்கு நாம் எதிர்த்தது நின்று அவனை ஜெயிக்க வேண்டும்.
கர்த்தர் கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரைச் சுற்றிலும் வேலி அடைத்து வைத்திருக்கிறார். சத்துரு உள்ளே நுழையாதபடி நம்மைச் சுற்றிலும் வேலி பாதுகாப்பாய் இருக்கிறது. சுத்துரு எத்தனைதடவை சுற்றி வந்தாலும் அவன் நம்மை வந்த தாக்க முடியாது. ஆனால் நாம் அந்த வேலியை தாண்டி வந்தால், அவர் நம்மை சுற்றி வைத்திருக்கிற அடைப்பை பிடுங்கினால் நிச்சயம் பாம்பு கடிக்கும். அதாவது நாம் பாவம் செய்வோமானால், நம் நாவினாலே, காதுகளாலே, கண்களினாலே தேவையற்ற் காரியத்தில் ஈடுபடுவோமானால் கர்த்தருக்கு பிரியமில்லாத காரியத்தைச் செய்வோமானால், நம்மைச் சுற்றி இருக்கிற வேலியை நாமே எடுத்துப் போட்டு, அடைப்பை பிடுங்கிப் போடுகிறோம். அப்போது சத்துரு மிகவும்எளிதாக உள்ளே நுழைந்துவிட நாம் இடம் கொடுக்கிறோம்.
கணவன் மனைவி மாறி மாறி வார்த்தைகளை பேசி சண்டையிட்டுக் கொள்ளும்போது, நாவை சத்துருவுக்கு கொடுத்து விடுகிறோம். நம் வாழ்வில் உள்ள அடைப்பை  பிடுங்கி விடுகிறோம். நம் குடும்பம் சத்துருவின் தந்திரங்களுக்கு திறந்துவிடப்பட்டு விடுகிறது.  தமிழ் நாட்டில் சீரியல் நாடகங்களுக்கு அடிமைப் பட்டோர் அநேகர். கிறிஸ்தவர்களாயிருந்தாலும், அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பவர்கள் அநேகர் உண்டு. அதைக் கண்டு தங்கள் மருமகள்களை மோசமாக நடத்தும் மாமியார்களும் உண்டு. மருமகள்களும் உண்டு. கணவன் மனைவிக்கும் இடையே வரும்  பிரச்சனைகளுக்கும் இந்த நாடகங்கள் சில வேளைகளில் காரணமாய் விடுகின்றன.  சில வேளைகளில் அதில் காட்டப்படும் விக்கிரக வழிபாடுகளின் வழியாக சத்துரு வீட்டிற்குள் வரும் அபாயங்களும் உண்டு. நாம் ஜாக்கிரதையாக இவைகளுக்கு விலகி ஜீவிக்க வேண்டும். நாம் காண்கிறதைக் குறித்தும், கேட்பதைக் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீன மதில்சுவர் எத்தனை வலிமையுள்ளதாக இருந்தாலும் அதையும் மீறி எதிரி உள்ளே வர முடியுமென்றால், நாம் நம் வாழ்க்கையை எத்தனை பத்திரமாக காத்துக் கொள்ள வேண்டும்!
தேவன் நம் வாழ்வில் கிருபையாக கொடுத்துள்ள வேலியை நாம் எறிந்துப்போட்டுவிடாதபடி, அடைப்பை; பிடுங்கிவிடாதபடி நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் காத்துக் கொள்வோம்.

சிறந்ததை கொடுப்போம்

இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. – (ஏசாயா 29:13).
.பழங்காலத்தில் ஸ்பெயின் நாட்டு மன்னர் தன்னுடைய அரசாட்சியின் கீழ் இருந்த ஒரு ஏழை கிராமத்தை காண விரும்பினார். அந்த கிராமத்தின் தலைவரிடம் இராஜா வருகிறார் என்று சொல்லப்பட்டது. உடனே அவர் அந்த கிராமத்தின் மக்களை கூட்டி இராஜா இந்த நாளில் வரப்போகிறார் என்று அறிவித்தார்.
உடனே மக்கள் சந்தோஷமாக அவரை வரவேற்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். தங்களால் இயன்றதை அவருக்கு கொடுத்து, சிறப்பாக அவருடைய வருகையை கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ஆனால் அவர்களிடம் இராஜாவிற்கு கொடுப்பதற்கு ஏழைகளாக இருந்தபடியால் ஒன்றுமில்லாதிருந்தது.

அவர்கள் திராட்ச இரசத்தை செய்வதில் வல்லவர்களாக இருந்தபடியால்,  அவர்கள் கூடி திட்டமிட்டு, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற சிறந்த இரசத்தை கொண்டு வந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பீப்பாயில் ஊற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டது.
அதன்படி ஒவ்வொருவரும் கொண்டு வந்து ஊற்றினார்கள். கடைசியில் அரசரும் வந்தார். அவரிடம் விலையுயர்ந்த வெள்ளி கிண்ணம் கொடுக்கப்பட்டது. அவரும் அதை வாங்கி மொண்டு, வாயில் ஊற்றியபோது அது வெறும் தண்ணீராக இருந்தது.
ஊற்றின ஒவ்வொருவரும், மற்றவர்கள் தங்களை காட்டிலும் நல்ல இரசத்தை ஊற்றியிருப்பார்கள் என்று வெறும் தண்ணீரை தான் ஊற்றி இருந்தார்கள். அதனால் மன்னர் வந்து குடித்தபோது அதன் வெறும் தண்ணீராகத்தான் இருந்தது. எத்தனை பரிதாபம்!

இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்கிற வசனம் எத்தனை பொறுத்தமாக அவர்களுக்கு இருக்கிறது.
நம்மில் அநேகரும் கர்த்தரை துதிக்க கூடியிருக்கும்போது, உள்ளத்திலிருந்து கர்த்தரை துதிப்பதில்லை. அவர்கள் உதடுகள் ஏதோ பாடி கொண்டிருக்கும், ஏதோ சொல்லி கொண்டு இருக்கும், ஆனால் உள்ளமோ எங்கோ இருக்கும்.
கர்த்தருடைய சமுகத்தில் வரும்போது நம்மால் இயன்றதைஇ நமது சிறப்பானதை கர்த்தருக்கு கொடுக்க வேண்டும். உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் துதியை அவருக்கு கொடுக்க வேண்டும். வெறும் உதடுகளிலிருந்து மாத்திரமல்ல, உள்ளத்திலிருந்து அவர் செய்த நன்மைகளை நினைத்து அவரை துதிக்க வேண்டும். உயர்த்தவேண்டும். நம்மிடத்தில் தேவன் விரும்பும் காரியம் அவரை துதிக்க வேண்டும் என்பதே. இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன். இவர்கள் என் துதியை சொல்லி வருவார்கள் என்று துதிப்பதற்காகவே நம்மை உருவாக்கி இருக்கிறார்.

ஆனாலும் அதிலும் அவரை வஞ்சித்து, இருதயம் ஓரிடத்திலும், உதடுகள் ஓரிடத்திலும் இருந்து துதிப்பது, மற்றவர்கள் தான் அவரை துதிக்கிறார்களே நான் துதித்தால் என்ன, துதிக்காமல் இருந்தால் என்ன என்று நினைப்பதை போன்றது. கடைசியில் மன்னர் வந்தபோது வெறும் தண்ணீரை சுவைத்ததுப் போலத்தான் இருக்கும், நம்முடைய துதிகள்.

போதகர் அல்லேலூயா சொல்லுங்கள் என்று சொன்னால்தான் சிலப்பேரின் வாயிலிருந்து அல்லேலூயா வரும். அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது  என்றபடி யாராவது நம்மை சொல்ல சொல்லி அந்த துதிகள் வராதபடி, நம் உள்ளத்திலிருந்து கர்த்தரை துதிக்கும் துதிகள் வரட்டும். கர்த்தர் அதில் மகிழ்வார். “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன். அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” என்று சங்கீதக்காரன் சொல்வதுப் போல நம் வாயிலும், இருதயத்திலும் எப்போதும் அவர் துதி இருக்கட்டும். துதிகளில் பிரியப்படுகிற ஆண்டவர் அதில் பிரியப்பட்டு நம்மை ஆசீர்வதிப்பார். நமக்கிருக்கிற சிறப்பானதை கர்த்தருக்கு கொடுப்போம். அவர் தம்முடைய ஒரே பேறான சிறந்த குமாரனை நமக்காக தந்தாரல்லவா? அவரை துதிக்கிற துதி எப்போதும் நம் வாயில் உள்ளத்தில் இருக்கட்டும். ஆமென் அல்லேலூயா!

சோர்ந்து போகாதே மனமே

ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது.  – (நீதிமொழிகள் 24:10).
.அது ஒரு தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ மருத்துவமனை. யுத்தகளத்தில் காயப்பட்ட இராணுவ வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இங்கு மரணத்தருவாயில் இருந்த இராணுவ வீரன் ஒருவரது அருகில் சிற்றாலய போதகர் ஜெபித்து கொண்டிருந்தார். கண் விழித்த வீரன் போதகரிடம் தனக்கொரு உதவி செய்யும்படி கேட்டு கொணடான். போதகரும் மிகுந்த ஆர்வத்துடன் கட்டாயம் செய்கிறேன் என்றார். மெதுவாக தனது பேண்ட் பையிலிருந்து ஒரு சிறு விசாச புத்தகத்தை எடுத்து அதில் ஒரு விலாசத்தை சுட்டிகாட்டி ‘இது என் ஞாயிறு பள்ளி ஆசிரியருடையது இவருக்கு நீங்கள் ஒரு கடிதம் எழுத வேண்டும். அதில் ஞாயிறு பள்ளியில் நீங்கள் கற்று கொடுத்த வேத வசனத்தின்படி நான் ஒரு நல்ல கிறிஸ்தவனாக வாழ்ந்து மரணத்தை சந்திக்கிறேன். என்னை இரட்சகர் இயேசுகிறிஸ்துவிடம் வழிநடத்திய உங்கள் பணிக்காக நன்றி கூறுகிறேன் என்ற செய்தியை அவர்களுக்கு அனுப்ப வேண்டும்’ என்றான். போதகரும் உடனே கடிதம் எழுதினார்.

ஓய்வு நாள் பள்ளி ஆசிரியரிடமிருந்து தாமதியாமல் பதிலும் வந்தது. அவரது கடிதத்தில் ‘மகனே, போனமாதம் என் ஞாயிறு பள்ளி ஆசிரியர் பணியை விட்டு விட்டேன். ஏனெனில் நான் கற்பித்து கொடுத்ததில் எந்த பலனுமில்லை என்பதாக உணர்ந்தேன். ஆனால் உன்னுடைய கடிதம் என்னை உயிர்ப்பித்தது, என்னுடைய பொறுமையின்மைக்காகவும், விசுவாச குறைவிற்காகவும் தேவனிடம் மன்னிப்பு கேட்டேன். மீண்டும் இவ்வூழியத்தை செய்ய திட்டமிட்டுள்ளேன். எனது சோர்வை நீக்கி உற்சாகமூட்டிய உனது கடிதத்திற்காக நன்றி செலுத்துகிறேன்’ என எழுதியிருந்தார். ஆனால் இக்கடிதத்ததை படிக்க இராணுவ வீரன் உயிருடன் இல்லை. இதை வாசித்த போதகரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. தேவனுடைய கிரியை எத்தனை மகத்துவமானது! ஆசிரியரை கொண்டு நல்ல கிறிஸ்தவர்களை உருவாக்கினார். அந்த ஆசிரியர் சோர்ந்த நேரத்தில் பழைய மாணவர்களை கொண்டு உயிர்ப்பிக்கிறார்.
எலியா தீர்க்கதரிசி தன் ஊழியத்தில் சோர்ந்து போனபோது, தேவன் எத்தனை கரிசனையாய் அவரை உயிர்ப்பிக்கிறார்! ‘அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம்போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்’ (1 இராஜாக்கள் 19:4-5). இது போன்ற சூழ்நிலைகளில் நாமும் கூட அடிக்கடி கடந்து சென்றிருக்கிறோம் அல்லவா? ஊழியத்தில் வருகிற பாடுகளை கண்டு, ‘போதும் ஆண்டவரே, என் ஆத்துமாவை எடுத்து கொள்ளும். நான் என் பிதாக்களை பார்க்கிலும் நல்லவன் அல்ல’ என நம் உள் மனதும் சொல்வதுண்டு. நாம் ஊழிய பாதையில் படும் சில பாடுகள் நம்மை அத்தனையாய் நினைக்கவும், போதும் இந்த ஊழியம் என்று சொல்லவும் வைத்தாலும் நம்மை அழைத்த கர்த்தர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்கிற நம்பிக்கை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கும்போது, உங்களை அந்த இடத்தில் ஊழியக்காரனாக வைத்திருப்பது தேவனடைய கிருபையும் சித்தமுமலல்லவா!
ஆனால் நம் சோர்வுகளை கண்டு தேவன் நம்மை அப்படியே விட்டு விடுகிறவர் அல்ல, நாம் செய்த ஊழியத்தில் இருந்து, மற்றொருவரை ஏற்படுத்தி சிறப்பாக செய்ய வைப்பது அவருக்கு இலேசான காரியம் என்றாலும், தேவன் இந்த ஊழியத்தை செ;யய உங்களையே எதிர்ப்பார்க்கிறார். அதனால் எந்த விதத்திலாகிலும் உங்களை உயிர்ப்பிக்கவே விரும்புகிறார். ஆகவே சோர்ந்து போகாதிருங்கள்!
உங்களுடைய தாலந்துகளை கர்த்தருக்கென்று இன்னும் வைராக்கியமாக உபபோயகப்படுத்துங்கள்! இன்னும் கர்த்தருக்கென்று வைராக்கியமாய் உழையுங்கள். சோர்வுகளை கண்டு மனம் தளர்ந்து போகாதிருங்கள். தேவன் உங்க்ள ஊழியத்தை ஆசீர்வதிப்பார். உங்கள் மூலம் மகிமைப்படுவார்.
விசுவாச ஓட்டத்திலும் ஊழியபாதையிலும்

நம்மை வழிநடத்தும் தேவன்

நம்மோடு இருப்பதால் சந்தோஷமாயிருங்க

என்னதான் நேர்ந்தாலும் சோர்ந்துபோகாதீங்க

நம்மை அழைத்த தேவன் கைவிடமாட்டார்.

சந்தோஷமாயிருங்க

சந்தோஷமாயிருங்க

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க

உயர்வானாலும், தாழ்வானாலும்

சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்